கோவையில் துணிகரம்: பா.ஜனதா மாவட்ட தலைவர் கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு

கோவை பா.ஜனதா மாநகர் மாவட்ட தலைவர் வீட்டில் நிறுத்தியிருந்த கார் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.;

Update:2018-03-22 02:41 IST
கோவை,

கோவை மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவராக இருப்பவர் சி.ஆர்.நந்தகுமார்(வயது 48). இவருடைய வீடு பீளமேடு ராமலட்சுமி நகரில் உள்ளது. இவருடைய மனைவி நேற்று வெளியூர் சென்றிருந்தார். நந்தகுமாரும் அவரது தாயார் கவுசல்யா ஆகிய இரண்டு பேர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். வீட்டின் போர்டிகோவில் நந்தகுமார் தனது காரை நிறுத்தியிருந்தார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டின் முன்பக்கத்தில் ஏதோ சத்தம் கேட்டது. இதைக் கேட்டு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கவுசல்யா எழுந்து வந்து கதவை திறந்து பார்த்தார். அப்போது வீட்டில் நிறுத்தியிருந்த காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் சத்தம் போட்டுக் கொண்டே நந்தகுமாரை எழுப்பினார்.

உடனே நந்தகுமார் ஓடிவந்து காரில் எரிந்த தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.

தகவல் அறிந்து தீயணைப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் காரின் முன்பகுதியில் இருந்த என்ஜின் முழுவதும் எரிந்து நாசமானது.

சம்பவம் நடந்த வீட்டின் போர்டிகோவில் இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். அதிகாலை 3 மணியளவில் 2 பேர் வீட்டு சுற்று சுவற்றுக்கு வெளியே நின்று கொண்டு காரின் முன்பக்கம் பெட்ரோலை ஊற்றுவதும் அதன் பின்னர் தீவைப்பதும் பதிவாகியிருந்தது. அவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்த துணை கமிஷனர் லட்சுமி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கார் எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, பா.ஜனதா கட்சியினர் மசக்காளிப்பாளையம் சாலை-அவினாசி சாலை சந்திப்பில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக பா.ஜனதா தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை வந்தார். அவர், நந்தகுமார் வீடடிற்கு வந்து எரிந்த காரை பார்வையிட்டார்.

கோவை காந்திபுரத்தில் உள்ள மாநகர் மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் கடந்த 7-ந் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பாலன், ஜீவா, அவருடைய நண்பர் கவுதம் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வேலூரில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும் பெரியார் குறித்து பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும் பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீசியதாக தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை பா.ஜனதா நிர்வாகி கார் எரிக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்