மல்லசமுத்திரத்தில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மல்லசமுத்திரம் பெரியகொல்லபட்டியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து, அப்பகுதி பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.;

Update:2018-03-23 04:15 IST
மல்லசமுத்திரம்,

திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் பேரூராட்சி பெரியகொல்லபட்டி தெற்குகாட்டுகொட்டாயில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த 2 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி, அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று அப்பகுதி பொது மக்கள் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறியும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

இதனால், அதிருப்தி அடைந்த அப்பகுதி பொது மக்கள் நேற்று காலை 11 மணியளவில், மல்லசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதில் சிலர் காலிக்குடங்களுடன் வந்திருந்தனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், கூடிய விரைவில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்