காசநோயை முற்றிலும் ஒழிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை

காசநோயை முற்றிலும் ஒழிக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் சுப்பிரமணியன் அறிவுரை கூறினார்.;

Update:2018-03-25 03:30 IST
விழுப்புரம்,

விழுப்புரத்தில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நேற்று இந்திய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி காசநோய் திட்டத்திற்கு உதவி புரிந்த அனைத்து நிறுவனங்களுக்கும் பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

அதனை தொடர்ந்து பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். அதன் பிறகு கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:-

உலக அளவில் 9.6 மில்லியன் மக்கள், காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்களில் முறையாக மருந்து எடுக்காமல் நோயின் தீவிரத்தோடு 75 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களால்தான் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. 6 மாதம் தொடர்ந்து மருந்து சாப்பிட்டாலே இந்நோயை குணப்படுத்த முடியும்.

வருகிற 2035-க்குள் காசநோயை உலகம் முழுவதும் ஒழிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் இந்த நோயை ஒழிக்க 44 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. காசநோயை முற்றிலும் ஒழிக்க பொதுமக்களிடம் நாம் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் சுதாகர், விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதாமணி, நலப்பணிகள் இணை இயக்குனர் நேரு, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் சவுண்டம்மாள், ஜெமினி, குடும்ப நல துணை இயக்குனர் சுகந்தி திருஞானம், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் தர்மலிங்கம், மாவட்ட நலக்கல்வியாளர் மகபூப்பாஷா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மருத்துவ அலுவலர் கார்த்திகேயன் நன்றி கூறினார். முன்னதாக கலெக்டர் தலைமையில் அனைவரும் காசநோய் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்