பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் தடையை மீறி ஊர்வலமாக சென்றனர்.;

Update:2018-03-25 03:45 IST
தேனி,

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ-ஜியோ) சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி தேனி பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்க பணியாளர்கள், களப்பணியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊதிய முரண்பாட்டை களையவேண்டும்.

21 மாத ஊதிய நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் மறுக்கப்பட்டு உள்ளதால் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கும், பகுதிநேர ஆசிரியர்கள், தொகுப்பு ஊதியம், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பு ஊதியம் பெறும் கணினி ஆசிரியர்களுக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முகமதுஅலி ஜின்னா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பழனிராஜ் மற்றும் அரசு ஊழியர் சங்கம், ஆசிரியர்கள் சங்கங்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் செல்ல முயன்றனர். இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுடன் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு சேது பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அவர்கள் பங்களாமேட்டில் இருந்து பழனிசெட்டிபட்டி வரை ஊர்வலமாக செல்லப் போவதாக தெரிவித்தனர். போலீசார் தடை விதித்த போதிலும் தடையை மீறி ஊர்வலமாக சென்றனர். சாலையோரம் வரிசையாக அணிவகுத்து சென்றனர். பின்னர் பழனிசெட்டிபட்டியில் பூதிப்புரம் சாலை சந்திப்பு அருகில் அவர்கள் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். அங்கு சிறிது நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

மேலும் செய்திகள்