ஏலம் எடுக்க யாரும் முன் வராததால் நடிகை ஸ்ரீவித்யா சென்னை வீடு ஏலம் தள்ளிவைப்பு
நடிகை ஸ்ரீவித்யா வீட்டை ஏலம் எடுக்க யாரும் முன் வராததால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீவித்யா. இவர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் போன்ற நடிகர்களுடைய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது 53-வது வயதில், 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.
அவருக்கு சொந்தமாக சென்னை அபிராமபுரம் சுப்பிரமணியம் தெருவில் 12 வீடுகள் கொண்ட சுவாதி அடுக்குமாடி குடியிருப்பில் 9-வது வீடு உள்ளது. அந்த வீட்டில் தற்போது சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஒருவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
வருமான வரி பாக்கி
ஸ்ரீவித்யா வருமான வரித்துறைக்கு ரூ.45 லட்சத்து 26 ஆயிரம் வரி பாக்கி வைத்திருந்ததாக தகவல் வெளியானது. இந்தநிலையில் அவரது சென்னை வீட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் ஏலம் விட முடிவு செய்தனர்.
இதை எதிர்த்து ஸ்ரீவித்யா உறவினர் சார்பில் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதையடுத்து ஸ்ரீவித்யா வீடு மார்ச் 26-ந்தேதி (நேற்று) ஏலம் விடப்படும் என்று வருமான வரித்துறை சார்பில் நோட்டீசு மூலம் தெரிவிக்கப்பட்டது.
1,250 சதுரடியில் 3 அறைகள் அடங்கிய அந்த வீட்டின் குறைந்தப்பட்ச ஏலத்தொகையாக ரூ.1 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஏலம் தள்ளிவைப்பு
ஏலத்தில் பங்கு பெற விருப்பம் தெரிவித்தவர்கள் கடந்த சில நாட்களாக ஸ்ரீவித்யா வீட்டை பார்த்து சென்றனர். இந்தநிலையில் சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று ஸ்ரீவித்யாவின் வீட்டை ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால் ஏலம் எடுக்க யாரும் வரவில்லை. இதனால் ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. ஏலம் நடைபெறும் தேதி குறித்து பின்னர் நோட்டீசு மூலம் தெரிவிக்கப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.