வாலாஜா அருகே கிணற்றில் வாலிபர், இளம்பெண் பிணங்கள் மிதந்ததால் பரபரப்பு

கிணற்றில் வாலிபர், இளம்பெண் பிணங்கள் மிதந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2018-03-28 04:45 IST
வாலாஜா, 

வாலாஜா அருகே விவசாய கிணற்றில் வாலிபர் மற்றும் இளம்பெண் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அருகில் கிடந்த ஆதார்அட்டை மூலம் பிணமாக கிடந்தவர்களின் அடையாளம் தெரியவந்தது.

இது குறித்து வாலாஜா போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வாலாஜாவை அடுத்த அம்மணந்தாங்கல் கிராமத்தில், தனியார் விவசாய நில பகுதி வழியாக தொழிலாளர்கள் நேற்று காலை வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள கிணற்றின் அருகே மோட்டார்சைக்கிள் ஒன்று அனாதையாக நிறுத்தப்பட்டிருந்தது. வேலைக்கு சென்றவர்களில் சிலர் கிணற்றை எட்டிப்பார்த்தபோது உள்ளே தண்ணீரில் வாலிபர் மற்றும் இளம்பெண் பிணமாக மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்த தகவல் பரவியதால் அங்கு ஏராளமானோர் திரண்டனர்.

தகவலறிந்து வாலாஜா போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான தீயணைப்பு படையினர் கிணற்றில் மிதந்த வாலிபர் மற்றும் இளம்பெண்ணின் உடலை மீட்டனர். பின்னர் 2 பேரின் பிணத்தையும் வாலாஜா போலீசார் பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

கிணற்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை சோதனையிட்டபோது அதில் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருப்பது தெரியவந்தது. அதன் மூலம் கிணற்றில் பிணமாக மிதந்த பெண் வேலூரை அடுத்த ஊசூர் அருகே உள்ள சின்ன சேக்கனூர் கிராமம், இந்திரா நகரை சேர்ந்த வேலுமணி என்பவரது மகள் எழிலரசி (வயது 21) என்பதும், பிணமாக கிடந்த ஆண் ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு கிராமம், மாந்தோப்பு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சுகுமாறன் (23) என்பதும் தெரிய வந்தது.

இருவரும் காதல் ஜோடியாக இருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக 2 பேரின் குடும்பத்தினருக்கும் வாலாஜா போலீசார் தகவல் தெரிவித்து இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்