கடலூர் முதுநகரில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி தொடங்கியது

கடலூர் முதுநகரில் ரூ.8½ கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நுண்ணுரம் தயாரிக்கும் மையத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி தொடங்கியது. இதை கடலூர் நகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Update: 2018-04-02 22:15 GMT
கடலூர்,

கடலூர் பெருநகராட்சிக்குட்பட்ட கடலூர் முதுநகர் வசந்தராயன்பாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.8½ கோடி செலவில் 1½ ஏக்கர் பரப்பளவில் நுண்ணுரம் தயாரிக்கும் மையம் அமைக் கப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொண்டு வந்து தரம் பிரித்து உரம் தயாரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்காக குப்பைகளை சேகரிக்கும் தளம், தரம் பிரிக்கும் எந்திரங்கள், குப்பைகளை மக்க செய்வதற்காக உரம் 55 சேகரிப்பு தொட்டிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை தொடங்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி நேற்று மாலை வாகனங்களில் எடுத்து வரப்பட்ட மக்கும் குப்பைகளை உரமாக்குவதற்காக சேகரிப்பு தொட்டியில் போட்டு நிரப்பி மூடி வைக்கப்பட்டன. இதை பெருநகராட்சி ஆணையர் சரவணன், செயற்பொறியாளர் ராமசாமி, நகர்நல அலுவலர் எழில்மதனா ஆகியோர் பார்வையிட்டனர்.

கடலூர் பெருநகராட்சியில் தினமும் 48 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இதில் 10 டன் குப்பைகளை இங்கு கொண்டு வந்து தரம்பிரித்து உரமாக தயாரிக்கலாம். முதல் கட்டமாக மக்கும் குப்பைகளை மட்டும் கொண்டு வந்து உரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 55 சேகரிப்பு தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொட்டியிலும் மக்கும்குப்பைகளை கொண்டு 2½ டன் உரம் தயாரிக்கலாம். ஒரு தொட்டியில் போடப்படும் குப்பைகள் உரமாவதற்கு 42 நாட்கள் ஆகும். இப்படி 55 தொட்டிகளிலும் மக்கும்குப்பைகளை நிரப்புவதன் மூலம் தினசரி 10 டன் உரங்களை தயாரிக்கலாம்.

உரம் தயாரிக்கும் பணியில் ஒரு மேற்பார்வையாளர் உள்பட 15 துப்புரவு ஊழியர்கள் இங்கு பணி புரிவார்கள். குப்பைகளை தரம் பிரிக்கும் எந்திரம் முழுமையாக செயல்பட தொடங்கியதும் அனைத்து வகை குப்பைகளையும் இங்கு கொண்டு வந்து தரம்பிரித்து உரம் தயாரிக்கும் பணி தொடங்கும். கடலூர் குண்டுசாலையிலும் நுண்ணுரம் தயாரிக்கும் மையம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்