2 நாள் சுற்றுப்பயணமாக ராகுல் காந்தி இன்று கர்நாடகம் வருகை

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று(செவ்வாய்க்கிழமை) கர்நாடகத்திற்கு வருகை தருகிறார். சிவமொக்கா, தாவணகெரே ஆகிய மாவட்டங்களில் அவர் கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.

Update: 2018-04-02 23:52 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் தேசிய தலைவர்கள் கர்நாடகத்திற்கு வருகை தந்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று(செவ்வாய்க்கிழமை) கர்நாடகத்திற்கு வருகிறார்.

தனி விமானம் மூலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளிக்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் சிவமொக்காவுக்கு வந்து சேருகிறார். அங்கு மதியம் 12.15 மணிக்கு நடைபெறும் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதைத்தொடர்ந்து சிவமொக்கா மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராகுல் காந்தி தாவணகெரேவுக்கு வருகிறார். ஒன்னாளி நகரில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஹரிஹரா, பதி ஆகிய நகரங்களிலும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன் பிறகு மாலை 5.30 மணிக்கு தாவணகெரேயில் நடைபெறும் காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். அந்த பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு ராகுல் காந்தி தாவணகெரேயில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

மறுநாளான நாளை(புதன்கிழமை) காலை 9 மணிக்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்துகிறார். அதைத்தொடர்ந்து சரக்கு-சேவை வரி மற்றும் பண மதிப்பிழப்பு திட்டம் குறித்து வணிகர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்துகிறார். அதன் பிறகு அவர் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

மேலும் செய்திகள்