காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகங்கையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிவகங்கையில் அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2018-04-03 22:15 GMT
சிவகங்கை,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

இதேபோல் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., அவைத்தலைவர் காளிதாஸ், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முருகானந்தம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சிவதேவ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கற்பகம் இளங்கோ, சந்திரன், குணசேகரன் மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் என்.எம்.ராஜா, அசோகன், ஜாக்குலின், வீழனேரி திருமதி சசிகுமார், இளைஞர், இளம்பெண் பாசறை ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தையொட்டி சிவகங்கை அரண்மனை வாசலில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கே அதிக அளவில் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனால் உண்ணாவிரத கூடம் நிரம்பியது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதலாக பந்தல் போடப்பட்டு அதில் தொண்டர்கள் அமர்ந்து உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். 

மேலும் செய்திகள்