கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு: மின்துறை தலைமை அலுவலகத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முற்றுகை

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை தலைமை அலுவலகத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-04-04 23:15 GMT
புதுச்சேரி,

புதுவையில் மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. யூனிட் ஒன்றுக்கு 20 காசு முதல் 50 காசு வரை உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு பொதுமக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்களது ஆதரவாளர்களுடன் வம்பாகீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த போராட்டத்துக்கு அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில செயலாளர் புருஷோத்தமன், எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மின்துறை தலைமை அலுவலகத்தின் மெயின்கேட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் ஊழியர்களால் அலுவலகத்துக்குள் செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ரவீந்திரன், அன்பானந்தம், பாப்புசாமி, ஞானவேல், கிருஷ்ணமூர்த்தி, மோகன்தாஸ் உள்பட சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

போராட்டம் குறித்து அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் குப்பை வரி, வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, நகராட்சி கடை வாடகை உயர்வு என பல்வேறு வரிகளை உயர்த்தி மக்கள் விரோத ஆட்சியை முதல்-அமைச்சர் நாராயணசாமி நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி முதல் 40 சதவீத மின்கட்டண வரி உயர்வினை திடீரென அறிவித்து மக்கள் மீது மீண்டும் வரிச்சுமையை முதல்-அமைச்சர் சுமத்தியுள்ளார்.

ஆட்சி அமைந்தவுடன் 100 யூனிட் மின்சாரம் உபயோகப்படுத்தும் வீடுகளுக்கு இலவச கட்டணம் என்று முதல் கையெழுத்து போட்ட முதல்-அமைச்சர் அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை. மாறாக 100 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 20 காசு உயர்த்தி இருப்பது நயவஞ்சக செயலாகும். அதிகபட்சமாக ஒரு யூனிட்டுக்கு 50 காசுகள் வரை உயர்த்தி இருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

மின்துறை நிர்வாக சீர்கேடு, ஊழல், முறைகேடு, தரமற்ற பொருட்கள் கமிஷன் பெற்று வாங்குவது, தொடர் மின் திருட்டு போன்ற துறையின் தவறுகளில் ஏற்படும் நஷ்டத்தையும், சுமார் ரூ.180 கோடிக்கு அரசு மின் கட்டண பாக்கி மற்றும் ரூ.150 கோடிக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் மின்பாக்கி என இரண்டையும் செலவினங்களாக கணக்கில் கொண்டு மின்நுகர்வோர் தலையில் கட்டண உயர்வினை அரசு திணித்துள்ளது.

இதுபோதாது என்று ஒவ்வொரு நுகர்வோரிடம் உபயோக கட்டணத்தின் மீது 4 சதவீத கூடுதல் வரி என்பது மின்துறை அரசு நிறுவனமா? அல்லது கந்துவட்டிக்கடை நிறுவனமா? என்ற சந்தேகம் எழுகிறது. உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெறும் வரை அ.தி.மு.க. தொடர்ந்து போராடும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்