திருடன் என நினைத்து பழைய பொருட்கள் சேகரிப்பவர் அடித்து கொலை 4 காவலாளிகள் கைது

திருடன் என நினைத்து பழைய பொருட்கள் சேகரிப்பவரை அடித்து கொன்ற காவலாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-04 23:24 GMT
மும்பை,

மும்பை செம்பூர் அமர்மஹால் கிழக்கு விரைவு சாலையில் உள்ள மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான தளவாட பொருட்கள் அங்கு வைக்கப்பட்டு உள்ளன. சம்பவத்தன்று 2 பேர் பெரிய சாக்குப்பைகளுடன் நின்று கொண்டிருந்ததை அங்கு பணியில் இருந்த காவலாளிகள் முகமது சல்மான்கான் (வயது19), அப்துல் காதிர் (21), ஹனிப் சேக் (19), முப்ரார் அன்சாரி (24) ஆகியோர் கவனித்தனர். இருவரும் அங்குள்ள இரும்பு பொருட்களை திருட வந்திருப்பதாக கருதி அவர்களை பிடித்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதில், பலத்த காயம் அடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே அடிதாங்க முடியாமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த திலக் நகர் போலீசார் காயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் பெயர் வேல்ஜி லா மாரு (வயது40) என்பதும், காயம் அடைந்தவர் பெயர் விலாஸ் (30) என்பதும் தெரியவந்தது.

இருவரும் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்பவர்கள் ஆவர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலாளிகள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்