நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது தாக்குதல்; ரூ.1 லட்சம் மீன்கள்-பொருட்கள் கொள்ளை

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகூர் மீனவர்களை தாக்கி ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்கள்-பொருட்களை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2018-04-05 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த சம்பா தோட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்(வய58). மீனவர். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவருடைய மகன் ரமேஷ்(32), அதேபகுதியை சேர்ந்த லட்சுமணன்(45), செல்வமணி(50), குப்புசாமி(50), இடும்பன்(45) ஆகிய 5 பேரும் நேற்று முன்தினம் மாலை நாகூர் பட்டினச்சேரியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் நாகூர் பட்டினச்சேரியில் இருந்து சுமார் 32 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு படகில் வந்த கடல் கொள்ளையர்கள் 5 பேர், நாகூர் மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்து இரும்பு பைப், கம்பிகளால் மீனவர்களை தாக்கினர். பின்னர் மீனவர்களின் மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி, மீன்கள், ஐஸ் பெட்டி உள்ளிட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

கடல் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த நாகூர் மீனவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் கரை திரும்பினர். உடனே பஞ்சாயத்தார்கள் மீனவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த நாகூர் மீனவர்களை தாக்கி அவர்கள் வைத்து இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மீன்கள், பொருட்களை கடல் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் பட்டினச்சேரி பகுதி மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

மேலும் செய்திகள்