ஜோலார்பேட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து

ஜோலார்பேட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து நாசமாயின.

Update: 2018-04-05 22:41 GMT
ஜோலார்பேட்டை,

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைகோடியூரில் வாணியம்பாடி மெயின்ரோட்டில் உள்ள பிரபல தனியார் நிதிநிறுவனத்தின் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கேரள மாநிலத்தில் உள்ளது. இங்கு 750-க்கும் மேற்பட்டோர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர். அவர்கள் அடகு வைத்த நகை அங்குள்ள லாக்கரில் பூட்டப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கிளை மேலாளரான பொன்னேரியை சேர்ந்த பலராமன் மகன் சிவா (வயது 29) மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் வேலைநேரம் முடிந்ததும் நிறுவனத்தை பூட்டிவிட்டு சென்றனர்.

நேற்று காலை அந்த நிறுவனத்தின் உள்ளே இருந்து புகை வந்தது. இதனை பார்த்த அந்த கட்டிடத்தின் உரிமையாளர் ஆறுமுகம் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், நிறுவனத்திற்கு செல்லும் மின் சப்ளையை துண்டித்துவிட்டு, கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து கிளை மேலாளர் சிவா விரைந்து வந்தார். அவர் நிறுவனத்தை திறந்து பார்த்தபோது அங்கிருந்த ஆவணங்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் லாக்கரில் இருந்த ரூ.3 கோடி மதிப்பிலான வாடிக்கையாளர்களின் தங்க நகைகள், ரூ.3 லட்சம் தப்பியது. ஆனாலும் இந்த தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்