நெல்லை பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி திறந்து வைத்தனர்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலையை அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2018-04-06 22:00 GMT
நெல்லை,

நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர் தலைமை தாங்கினார். பதிவாளர் சந்தோஷ் பாபு வரவேற்று பேசினார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, வி.ஜி.பி. உலக தமிழ் சங்க தலைவர் கலைமாமணி வி.ஜி.சந்தோஷம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தனர். மேடையில் இருந்தவர்களுக்கு வி.ஜி.சந்தோஷம், சிறிய திருவள்ளுவர் சிலையை பரிசாக வழங்கினார்.

விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசும்போது, “வான்புகழ் கொண்ட திருவள்ளுவருக்கு வி.ஜி.சந்தோஷம் கனடா, மலேசியா போன்ற பல்வேறு நாடுகளில் சிலைகள் வைத்துள்ளார். திருவள்ளுவரை உலகம் முழுவதும் பரப்பிய பெருமை அவரையே சாரும். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்த பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் தற்போது 87 கலைக்கல்லூரிகள் உள்ளன. கூடுதலாக கல்லூரிகள் தொடங்கி கல்வி சேவை செய்ய வேண்டும்“ என்றார்.

அமைச்சர் ராஜலட்சுமி பேசுகையில், “உலக பொதுமறை நூலான திருக்குறளை எழுதிய திருவள்ளுவருக்கு பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நாள் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொன்னான நாள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளையாட்டு துறைக்கு ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை வழங்கினார். அதன் மூலம் தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகிறார்கள். மாணவர்கள் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்“ என்றார்.

விழாவில் வி.ஜி.சந்தோஷம் பேசும்போது, “உலகத்தை 2 அடியில் அளந்த திருவள்ளுவருக்கு கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் எங்கள் அமைப்பு சார்பில் சிலை வைக்கப்பட்டு உள்ளது. அதிக அளவு மொழிபெயர்ப்பான நூல் திருக்குறள். இந்த நூலில் வாழ்வியல் தத்துவங்களை பற்றி தெளிவாக கூறப்பட்டு உள்ளது. திருக்குறளையும், திருவள்ளுவரை பற்றியும் உலக தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு படிக்கும் மாணவர்களும் திருவள்ளுவரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் தினமும் ஒரு திருக்குறளை படிக்க வேண்டும்“ என்றார். மொழி ஆய்வக துறை புல முதல்வர் ஸ்டீபன் நன்றி கூறினார்.

விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்