தூத்துக்குடி மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி

தூத்துக்குடி மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.

Update: 2018-04-06 22:00 GMT
தூத்துக்குடி, 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகளை அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கும் மற்றும் திறன் தேர்வுகளுக்கும் தயார் செய்வதற்காக ஒன்றிய அளவில் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 738 மாணவ-மாணவிகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதில் 296 மாணவ-மாணவிகள் வருகிற மே மாதம் நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். அவர்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற்று தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பதற்காக தமிழக அரசு சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது. அந்த நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி திருச்சிலுவை ஆங்கிலோ இந்தியன் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு, 296 மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.

ஏழை இல்லா தமிழகத்தை உருவாக்க கல்வி ஒன்றால் மட்டுமே முடியும். அரசு ஆண்டுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கி வருகிறது.

தமிழகத்தில் கல்வித்துறைக்காக கடந்த ஆண்டு ரூ.26 ஆயிரத்து 932 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.27 ஆயிரத்து 208 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. போட்டி தேர்வு மற்றும் திறன் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்துவதற்காக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அரசு, மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்ற பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களை சிறந்த முத்துக்காக, சிறந்த சிற்பிகளாக மாற்ற இந்த அரசு தயாராக உள்ளது. கடைசியாக மாணவர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.

மூச்சி நின்றால் மட்டும் மரணம் அல்ல. முயற்சி நின்றாலும் மரணம் தான். எனவே மாணவர்கள் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ளுங்கள். வெற்றியை பெற்றுவிடலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்