கூடலூரில் மண்ணுக்குள் புதைந்து தொழிலாளி சாவு

கூடலூரில் மண்ணுக்குள் புதைந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-04-06 22:15 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள கனரா வங்கி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் பெரியமண் மேடு உள்ளது. இங்கு கடந்த சில வாரங்களாக மண்ணை தோண்டி எடுத்து கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கூலி தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வந்தனர். நேற்று கூடலூர் அருகே சூண்டி பகுதியை சேர்ந்த செல்லமுத்து மகன் முருகன் என்ற அருள்முருகன் (வயது 33), சளிவயல் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் நாகராஜ் (43) ஆகிய 2 பேர் மட்டும் பணிக்கு வந்திருந்தனர்.

மதியம் 3.30 மணி அளவில் மண்மேடு அருகே நின்று கொண்டு அருள்முருகன், நாகராஜ் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண்மேடு சரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அதற்குள் அருள்முருகன் மண்ணுக்குள் புதைந்தார். மண் விழுந்த போது ஓடிய நாகராஜ் வேகமாக வந்து விழுந்த மண்ணால் தள்ளப்பட்டு படுகாயம் அடைந்தார். காயத்துடன் அவர், கூடலூர்- கோழிக்கோடு சாலைக்கு வந்து அபயக்குரல் எழுப்பினார்.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். இது குறித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து பொதுமக்களின் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்த அருள்முருகனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதைதொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், சத்தியன் உள்ளிட்ட போலீசார் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்தனர்.

பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் சரிந்து விழுந்த மண்ணை தோண்டி ஆபத்தான நிலையில் இருந்த அருள்முருகன் மீட்கப்பட்டார். உடனடியாக அவரை கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இறந்து போன அருள் முருகன் பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். இவருக்கு திருமணம் ஆகி இலக்கியா என்ற மனைவியும், ஹான்சிகா என்ற கைக்குழந்தையும் உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அவரின் பெற்றோர், உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி வளாகத்துக்கு திரண்டு வந்து கதறி அழுதனர். படுகாயம் அடைந்த நாகராஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அந்த பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் 90 டிகிரி கோணத்தில் உள்ள மண்மேடுகளை தோண்டி எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் விதிமுறைகளை மீறி பெரும்பாலான இடங்களில் இரவில் மண்மேடுகள் வெட்டி எடுக்கப்படுகிறது.

தற்போது மண்ணுக்குள் புதைந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் நடந்த பகுதியின் அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்துள்ளனர். எனவே தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வேண்டும். இதற்கு போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்