திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

குடியிருக்கும் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2018-04-06 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று செங்குன்றம் அடுத்த டாக்டர் வரபிரசாத்ராவ்நகர் பகுதியை சேர்ந்த திரளான பழங்குடியின மக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது.

நாங்கள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த நல்லூர் ஊராட்சி ஆட்டதாங்கல் கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு ரேஷன்கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, சாலை வசதி போன்றவை உள்ளது. இந்த நிலையில் எங்கள் பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று நெடுஞ்சாலைதுறை இடத்தில் இருப்பதாக கூறி பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

கோர்ட்டு உத்தரவுப்படி திருமண மண்டபம் இடித்து அகற்றப்பட்டது. திடீரென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நாங்கள் குடியிருக்கும் இடம் நெடுஞ்சாலைத்துறை புறம்போக்கு பகுதியில் உள்ளதாக கூறி வீடுகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தனர். இந்த இடம் கடந்த 1987-ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் டாக்டர் வரபிரசாத்ராவால் பழங்குடியின மக்களுக்கு கொடுக்கப்பட்டதாகும். எனவே எங்கள் வீடுகளை அகற்றக்கூடாது. ஆகவே கலெக்டரிடம் முறையிட வந்துள்ளோம்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் எ.சுந்தரவல்லியிடம் அளித்தனர். அதைபெற்றுக்கொண்ட அவர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்