கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து: தி.மு.க., அ.ம.மு.க. கட்சியினர் முற்றுகை போராட்டம்

மன்னாடிமங்கலத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தி.மு.க., அ.ம.மு.க. கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2018-04-06 21:45 GMT
சோழவந்தான்,

சோழவந்தானை அடுத்த மன்னாடிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. தேர்தல் அதிகாரியாக கூட்டுறவு சார்பதிவாளர் போஸ் செயல்பட்டார். இதில் அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க., கம்யூனிஸ்டு, பி.ஜே.பி உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த 51 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் 22 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவித்து இறுதி பட்டியலை கடந்த 3-ந்தேதி அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டது. அதில் அ.தி.மு.க.-6, ம.தி.மு.க.-9 அ.ம.மு.க.-3, கம்யூனிஸ்டு-2 பி.ஜே.பி-1 சுயேட்சை-1 என அறிவிக்கப்பட்ட இருந்தது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றுமுன்தினம் இரவு சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதைப்பார்த்ததும் ஆத்திரமடைந்த தி.மு.க, அ.ம.மு.க கட்சிகளை சேர்ந்த ராதாகிருஷ்ணன், மணிவேல் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் தொடக்க வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தலை நடத்த கோரியும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை அருகே உள்ளது 15.பி மேட்டுபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம். இங்கு இன்று (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற இருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. பின்னர் இந்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக கிடைத்த தகவலின் பேரில் கூட்டுறவுதுறை அதிகாரிகள் தேர்தலை ரத்து செய்ததாக அறிவித்தனர். ஏற்கனவே கள்ளிவேலிபட்டி கூட்டுறவு சங்க தேர்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

மேலும் செய்திகள்