அடக்கஸ்தலம் அமைத்து தரக்கோரி ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகை

அடக்கஸ்தலம் அமைத்து தரக்கோரி ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலவரத்தை தூண்டியதாக 50 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2018-04-07 04:30 IST
அடக்கஸ்தலம் அமைத்து தரக்கோரி ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தை முஸ்லிம்கள் முற்றுகை
ஆலங்குடி,

ஆலங்குடி அருகே கலிபுல்லா நகரில் ஏராளமான முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால், அவரது உடலை அடக்கம் செய்ய இப்பகுதியில் அடக்கஸ்தலம் கிடையாது. இதுகுறித்து அப்பகுதி முஸ்லிம்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றியத்தில், ஜமாத் மூலமாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்து உடனடியாக இப்பகுதியில் அடக்கஸ்தலம் அமைத்து தரக்கோரி நேற்று த.மு.மு.க. மாவட்ட தலைவர் சையது முகமது தலைமையில் அக்கட்சியினர் மற்றும் அப்பகுதி முஸ்லிம்கள் ஒன்று கூடி, ஜணாஷா பெட்டியை (சடலத்தை தூக்கி செல்லும் பெட்டி) கொண்டு வந்து ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்திருந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்திலிப்பு தலைமையிலான போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் முற்றுகை போராட்டம் நடத்த வந்தவர்களில் சிலர், தாங்கள் கொண்டு வந்த ஜணாஷா பெட்டியை அலுவலகத்திற்குள் தூக்கி எறிந்து உள்ளே செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் மற்றும் தாசில்தார் ரெத்தினாவதி ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கலவரத்தை தூண்டியதாக, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் முகமது ஜலீல் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்