கோபியில் காரில் 1 டன் ரேஷன் அரிசி கடத்தல் டிரைவர் தப்பி ஓட்டம்

கோபியில், காரில் 1 டன் ரேஷன் அரிசியை கடத்திய டிரைவர் தப்பி ஓடினார்.

Update: 2018-04-19 22:45 GMT
கடத்தூர்,

கோபி வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிவேலு மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று மதியம் கோபி பாரியூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. உடனே அதிகாரிகள் அந்த காரை தடுத்து நிறுத்தினார்கள்.

அப்போது டிரைவர் காரை அங்கேயே நிறுத்திவிட்டு, தப்பி ஓடி விட்டார். இதைத்தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகள் அந்த காரை சோதனை செய்தனர். அப்போது காருக்குள் 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து கோபி போலீசாருக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கார் மற்றும் அதனுள் இருந்த ரேஷன் அரிசி ஆகியவற்றை பார்வையிட்டனர்.

பின்னர் காரை பறிமுதல் செய்த போலீசார் அதில் இருந்த ரேஷன் அரிசியை கைப்பற்றி, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் கடத்தி வரப்பட்ட ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? ரேஷன் அரிசியை கடத்தி வந்த டிரைவர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்