காற்றாலைகள் அமைக்க எதிர்ப்பு: கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

காற்றாலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-04-20 21:00 GMT
கோவில்பட்டி, 

காற்றாலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

காற்றாலைகள் அமைக்க எதிர்ப்பு 

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, கடம்பூர், பசுவந்தனை, எப்போதும் வென்றான், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலைகள் அதிகளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக காற்றாலை பண்ணை உரிமையாளர்கள், விவசாயிகளிடம் ஆசைவார்த்தை கூறியும், மிரட்டியும் நிலங்களை பறித்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், காற்றாலைகள் அமைப்பதற்கு 1,000 அடி ஆழம் வரையிலும் ஆழ்குழாய் கிணறு அமைப்பதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் நிலத்தடியில் கடல்நீர் உட்புகுந்து, விவசாயம் அழிந்து விடும். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். காற்றின் ஈரப்பதமும் குறைந்து விடும். மேலும் காற்றாலைக்கு தேவையான சரள் மண்ணை கண்மாய், ஓடை போன்ற அரசு புறம்போக்கு நிலங்களில் முறைகேடாக எடுக்கின்றனர். அரசு புறம்போக்கு நிலங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்கம்பங்களையும் நடுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை 

இதை தொடர்ந்து காற்றாலைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், காற்றாலை நிறுவனங்களிடம் இருந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வலியுறுத்தியும், பாரதீய கிசான் சங்கத்தினர் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேசுநாயக்கர், துணை தலைவர் பரமேசுவரன், மகளிர் அணி தலைவி கிருஷ்ணம்மாள், ஒன்றிய இளைஞர் அணி தலைவர் பொன்ராஜ், துணை தலைவர் ஜெயகுமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ரகுபதியிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்