எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நிறைவு; மாணவ-மாணவிகள் உற்சாகம்

திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நிறைவு ஆனதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் ஒருவருக்கொருவர் கலர்பொடியை தூவி மகிழ்ந்தனா்.

Update: 2018-04-21 00:00 GMT
திருச்சி, 

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் 156 மையங்களில் பொதுத்தேர்வு நடந்தது. சமூக அறிவியல் பாடத்தாளுடன் பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. மதியம் தேர்வு முடிந்ததும் தேர்வு அறையில் இருந்து மாணவ- மாணவிகள் வேகமாக வெளியே ஓடி வந்தனர். தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் ஒருவர் மீது ஒருவர் பேனா மையை தெளித்தனர்.

 மேலும், கலர் பொடிகளை ஒருவர் முகத்தில் ஒருவர் தடவியும், கேக் வெட்டியும் உற்சாகமடைந்தனர். திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள பள்ளியில் உள்ள மாணவிகள் சிலர் துள்ளிக் குதித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிலர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பிரியா விடை பெற்றனர். ஆசிரியர்களும் மாணவ- மாணவிகளை வாழ்த்தி அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி விடுதிகளில் தங்கியிருந்து படித்த மாணவ-மாணவிகள் தங்கள் உடைமைகளை எடுத்து கொண்டு சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். வருகிற 25-ந் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்