ஊட்டியில் பத்திரப்பதிவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவையை சேர்ந்த இணை சார்பதிவாளர் கைது

ஊட்டியில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவையை சேர்ந்த இணை சார்பதிவாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-23 23:00 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தாசில்தார் அலுவலகம் அருகே 2-ம் எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு ஊட்டி, குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களது நிலம் சம்பந்தமான பத்திரப்பதிவை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மஞ்சூர் அருகே எடக்காடு கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனது 60 சென்ட் நிலத்தை முத்துசாமி என்பவருக்கு விற்பனை செய்ய பத்திரப்பதிவுக்கான முயற்சிகளை எடுத்தார்.

இந்த பத்திரப்பதிவு வேலைகளை அவரது தரப்பு வக்கீல் ரவிக்குமார் கவனித்து வந்தார். அப்போது பத்திரப்பதிவு செய்ய இணை சார்பதிவாளர் ரமேஷ் (வயது 43) வக்கீலிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வக்கீல் சிவக்குமார் ஊட்டி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் கேட்ட அவரை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அதன்படி ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரம் ரொக்க பணத்தை வக்கீல் ரவிக்குமாரிடம் அவர்கள் கொடுத்தனர். அந்த பணத்தை அவர் இணை சார்பதிவாளர் ரமேசிடம் பத்திரப்பதிவு செய்வதற்காக லஞ்சமாக நேற்று கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இணை சார்பதிவாளரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அந்த அலுவலகத்தை பூட்டி போலீசார் சுமார் 4 மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினர்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து ஸ்கேனர், பைல்கள் உள்ளிட்ட சில பொருட்களை பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் இணை சார்பதிவாளர் ரமேஷ் அலுவலகத்தில் வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் முகத்தை துணியால் மறைத்து இருந்தார். மேல்விசாரணைக்காக கோவைக்கு காரில் அழைத்து செல்லப்பட்டார்.

கைதான இணை சார்பதிவாளர் ரமேஷ் கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர். ஊட்டியில் கடந்த சில மாதங்களாக தான் அவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் ஊட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்