மேற்கு மாம்பலத்தில் தொழில் உரிமம் இல்லாத பிரியாணி கடைக்கு ‘சீல்’ மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை மேற்கு மாம்பலத்தில் தொழில் உரிமம் இன்றி செயல்பட்டு வந்த பிரியாணி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2018-04-23 22:43 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முறையாக சொத்துவரி செலுத்தாத மற்றும் தொழில் உரிமம் இல்லாமல் செயல்படும் கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் சென்னை கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் உள்ள பிரியாணி கடை முறையான தொழில் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த பிரியாணி கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் குழு நேற்று சென்றது. கடையில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 வருடமாக தொழில் உரிமம் இல்லாமல் அந்த பிரியாணி கடை செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி, கடையை ‘சீல்’ வைக்க அதிகாரிகள் முயற்சித்தனர்.

பிரியாணி கடைக்கு ‘சீல்’

இதற்கிடையில் மாநகராட்சி அதிகாரிகளுடன், கடை ஊழியர்கள் விவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து போலீசார் உதவியுடன் கடைக்காரர்களை அப்புறப்படுத்தி, அந்த பிரியாணி கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

ஆனாலும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் இறங்கி ஊழியர்கள் போராடினர். அதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “தொழில் உரிமம் இல்லாமல் கடைகள் செயல்படுவது மாநகராட்சி சட்ட விதிகளின்படி தவறு. தொடர்ந்து இதுபோல மண்டல வாரியாக தொழில் வரி தொடர்பாக கடைகள் ஆய்வு செய்யப்பட்டு, முறைகேடு தெரியவந்தால் ‘சீல்’ நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றனர். 

மேலும் செய்திகள்