கீரமங்கலத்தில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது

கீரமங்கலத்தில் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-24 23:00 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீரமங்கலம் பேரூராட்சிக்கு சொந்தமான குளத்தை நிர்வாகம் ஆக்கிரமிக்க வைத்துவிட்டது. மேலும் அம்புலி ஆறு, ராமனேரி குளத்திற்குள் குப்பைகள் கொட்டப்படு கிறது. மேலும் முறையான டெண்டர் முறைகளை கடைப்பிடிக்கவில்லை என்பன உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பேரூராட்சி உயர் அதிகாரிகள் வரவேண்டும் எனக்கூறினார்கள். அதைத்தொடர்ந்து பேரூராட்சிகள் துணை இயக்குநர் சதீஷ் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

30 பேர் கைது

அப்போது சில இடங் களில் வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள். இதையடுத்து பஸ் நிலையம் அருகே பேரூராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட பதாகை அகற்றப்பட்டது. தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 30 பேரை கீரமங்கலம் போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். அங்கு அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்