ஏழை, எளிய மக்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்

நெல்லை மாவட்டத்தில் கியாஸ் இணைப்பு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக, கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2018-04-24 20:45 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கியாஸ் இணைப்பு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதாக, கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

சிறப்பு கிராம சபை கூட்டம்

பாளையங்கோட்டை யூனியன் நொச்சிகுளம் கிராமத்தில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நேற்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. ஊர் பிரமுகர் பண்டாரம் தலைமை தாங்கினார். கலெக்டர் சந்தீப் நந்தூரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கிராம சபை கூட்டத்தில் பிரதமரின் உரை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள், பொதுமக்கள் கண்டு களித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறியதாவது:-

காப்பீடு திட்டம்

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாடு முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கிராம சுயாட்சி இயக்கத்தின் கீழ் 29 கிராம பஞ்சாயத்துகளில் மத்திய அரசின் 7 திட்டங்கள் 100 சதவீதம் முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குதல், வங்கிகள் மூலம் ரூ.12-ல் விபத்து காப்பீட்டுத் திட்டமும், ரூ.330-ல் காப்பீட்டு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதில் அனைவரும் சேரவேண்டும். இந்த திட்டத்தால் விபத்து மற்றும் எவ்வித காரணத்தால் இறந்தாலும் வாரிசுதாரர்களுக்கு பணம் கிடைக்கும்.

இலவச கியாஸ் இணைப்பு

மேலும், வீடுகளில் கழிப்பறை கட்டும் திட்டத்தில் இதுவரை கழிப்பறை இல்லாத வீடுகளில் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் மானிய விலையில் ரூ.50-க்கு எல்.இ.டி பல்பு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மின்சார செலவு மிச்சமாகும்.

மேலும், கியாஸ் இணைப்பு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக இணைப்பு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் பயனடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் கல்யாணசுந்தரம், முன்னோடி வங்கி மேலாளர் கஜேந்திரநாதன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சக்திமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்