பணம் வைப்பதுபோல் வைத்துவிட்டு ஏ.டி.எம். எந்திரங்களை திறந்து லட்சக்கணக்கில் திருடிய ஊழியர் கைது

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைப்பதுபோல் வைத்துவிட்டு, பின்னர் எந்திரத்தை திறந்து லட்சக்கணக்கில் பணத்தை திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-24 23:00 GMT
கோவை,

கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்கும் பொறுப்பை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 32) என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர், ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்கும் பொறுப்பை கடந்த 2½ ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். அவர் பணம் வைக்கும் எந்திரங்களில் பணம் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என்று மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்தநிலையில் பணம் குறைவாக இருந்த ஏ.டி.எம். மையங்களின் கண்காணிப்பு கேமராக்களை இந்த நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சுரேஷ்குமார், பணம் நிரப்பும் பணியில் இல்லாதபோது ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று எந்திரத்தின் பணம் வைக்கும் பகுதியை நைசாக திறந்து லட்சக்கணக்கில் பணத்தை திருடியது கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து ஏ.டி.எம். பணம் வைக்கும் நிறுவனத்தின் அதிகாரி ஜெகதீஷ் கோவை நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி கமிஷனர் சந்திரசேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலையரசி, சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் சுரேஷ்குமார் மீது மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று இரவு கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து கோவை நகர குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது:-

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுரேஷ் குமார் கோவை காளப்பட்டி நேரு நகர் பகுதியில் உள்ள ஆக்சிஸ் ஏ.டி.எம்.மில் ரூ.6 லட்சமும், இதே வங்கியின் வரதராஜபுரம் ஏ.டி.எம்.மில் ரூ.24 ஆயிரமும், மசக்காளிபாளையத்தில் உள்ள ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம், கருமத்தம்பட்டியில் உள்ள பேங்க் ஆப் பரோடா ஏ.டி.எம்.மில் ரூ.8 ஆயிரம் என்று மொத்தம் ரூ.7 லட்சத்து 34 ஆயிரம் வரை திருடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்