கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்

கொல்லங்கோடு அருகே கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

Update: 2018-04-24 22:45 GMT
கருங்கல்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி தடுப்பு சுவரையும் தாண்டியதால், கரையோரம் இருக்கும் வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால், கடற்கரையோர கிராமங்களை சேர்ந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.

கடல் சீற்றம் காரணமாக வள்ளவிளை பகுதியில் 5 வீடுகள் இடிந்தன. இதுபோல், மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் பல பகுதிகளில் கடற்கரை சாலைகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தநிலையில், கொல்லங்கோடு அருகே கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட நீரோடி, மார்த்தாண்டன்துறை, வள்ளவிளை போன்ற கடலோர பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். வள்ளவிளை பங்குத்தந்தை டார்வின், பங்குபேரவை செயலாளர் சுனில் ஆகியோர் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய மந்திரியிடம் விளக்கி கூறினர்.

கடந்த ஆண்டு ஒகி புயலின் போது துண்டிக்கப்பட்ட நீரோடி- இனயம் கடலோர சாலை இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. அந்த சாலையை மத்திய மந்திரி நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வள்ளவிளை பகுதியில் கடல் சீற்றத்தால் அலை தடுப்பு சுவர் சேதமடைந்து உள்ளது. இங்கு ஒருவாரத்திற்குள் தற்காலிகமாக அலைதடுப்பு சுவர் அமைக்கப்படும்.

வீடுகளை இழந்த மக்களுக்கு பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், சொந்த இடம் இருப்பவர்களுக்கும், மாநில அரசு ஒதுக்கீடு செய்து கொடுப்பவர்களுக்கும் உடனடியாக வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மந்திரியுடன் பா.ஜனதா கட்சியை சேர்ந்த பலர் உடனிருந்தனர்.

மண்டைக்காடுபுதூர் பகுதியில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடலுக்குள் அமைக்கப்பட்டிருந்த தூண்டில் வளைவு சேதமடைந்தது. மேலும், 3 மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன.

இந்த பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். அவருடன் பங்குதந்தை மைக்கேல்ராஜ் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்