யானை தந்தம்-நாட்டு துப்பாக்கியை விற்க முயன்ற வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 3 பேர் விடுதலை

யானை தந்தம்-நாட்டு துப்பாக்கியை விற்க முயன்ற வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 3 பேரை விடுதலை செய்து சத்தியமங்கலம் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-04-24 23:15 GMT
சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட கெம்பநாயக்கன்பாளையம் வனப்பகுதியில் கடந்த 27-1-2000 அன்று அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் உசேன் மற்றும் குழுவினர் சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க ரோந்து சென்றார்கள். அப்போது கில்பாணி என்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒரு மூட்டையை சுமந்தபடி நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

இதை பார்த்த அதிரடிப்படையினர் அவர்கள் வைத்திருந்த மூட்டையை வாங்கி பிரித்து பார்த்தார்கள். அந்த மூட்டையில் 12 யானை தந்தங்களும், ஒரு நாட்டு துப்பாக்கியும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சத்தியமங்கலம் அருகே உள்ள கொளத்தூரை சேர்ந்த சண்முகம், ஜவகர், ராஜேந்திரன், கோவிந்தராஜன், ஆறுமுகம், சந்திரகவுடா என்பது தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் வீரப்பன் கூட்டாளிகளான அவர்கள், வீரப்பன் உத்தரவுப்படி யானை தந்தங்களையும், நாட்டு துப்பாக்கியையும் கேரளாவுக்கு விற்க கொண்டு சென்றதும் தெரிந்தது. இதையடுத்து இவர்கள் 6 பேரையும் சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் அதிரடிப்படையினர் ஒப்படைத்தார்கள். இதுகுறித்து வனத்துறையினர் வீரப்பன் உள்பட 7 பேர் மீது சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

இதில் வீரப்பன் சிக்கவில்லை. கோவிந்தராஜனும், ஆறுமுகமும் ஜாமீனில் வெளியே வந்தார்கள். ஆனால் வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருக்கும்போதே கோவிந்தராஜன், வீரப்பன், சந்திரகவுடா ஆகியோர் இறந்துவிட்டார்கள். இதனால் அவர்களுக்கு வழக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆறுமுகம் தலைமறைவானார். அவரை வனத்துறையினர் தேடி வருகிறார்கள். மற்ற 3 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர் ஆகி வந்தார்கள். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு சத்தியமங்கலம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கு இறுதி கட்டத்தை எட்டியதை தொடர்ந்து நீதிபதி குமரசிவம் தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், ‘இந்த வழக்கு சம்பந்தமாக வனத்துறையினர் சரியான சாட்சிகளை சமர்ப்பிக்கவில்லை. எனவே சண்முகம், ஜவகர், ராஜேந்திரன் ஆகிய 3 பேரையும் விடுதலை செய்கிறேன்.’ என்று உத்தரவிட்டார். வீரப்பன், கோவிந்தராஜன், சந்திரகவுடா ஆகியோர் இறந்துவிட்டதால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்கள். சந்தன கடத்தல் வீரப்பன் இறந்த பின்பு அவர் தொடர்புடைய வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்