போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே துணிகரம்: ஆவின் ஊழியரிடம் தங்க சங்கிலி பறிப்பு

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சைக்கிளில் சென்ற ஆவின் பெண் ஊழியரிடம் 1½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.

Update: 2018-04-24 22:30 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு துறை செயல்பட்டு வருகிறது. இதன் அருகே உள்ள ஆவின் பாலகத்தில் செட்டிநாயக்கன்பட்டி காந்திநகரை சேர்ந்த அங்குத்தாய் (வயது 30) என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அவர் செட்டிநாயக்கன்பட்டியில் இருந்து சைக்கிளில் வேலைக்கு கிளம்பினார். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே அமைந்துள்ள போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் வழியாக அவர் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் ஒருவர் அங்குத்தாயை பின்தொடர்ந்து வந்துள்ளார். கண்இமைக்கும் நேரத்தில் அந்த நபர், அங்குத்தாய் கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டார்.

இதுகுறித்த தகவல் கலெக்டர் அலுவலகத்தில் காட்டுத்தீ போல பரவியது. சம்பவம் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு உடனடியாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலக வளாகம், கோர்ட்டு, செட்டிநாயக்கன்பட்டி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் தேடி அலைந்தனர். ஆனால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து தாடிக்கொம்பு போலீசில் அங்குத்தாய் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது திண்டுக்கல் நகர் பகுதியில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுண்டு ரோட்டில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடமும், செட்டிநாயக்கன்பட்டி பகுதியில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடமும் மர்ம நபர்கள் நகையை பறித்து சென்றனர். தற்போது, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் அருகிலேயே நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்