முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும்

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சேலம் வரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும் என அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2018-04-24 22:16 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் வருகிற 27, 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இதையொட்டி சேலத்திற்கு வரும் முதல்-அமைச்சருக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு கொடுப்பது தொடர்பாக அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பன்னீர்செல்வம் எம்.பி. தலைமை தாங்கினார். முன்னாள் மேயர் சவுண்டப்பன், ஏ.பி.சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.செல்வராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சேலம் வரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 26-ந் தேதி இரவு சேலம் வருகிறார். கோவையில் இருந்து கார் மூலம் சேலம் வருகை தரும் அவருக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான முறையில் வரவேற்பு கொடுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சேலத்தில் 27-ந் தேதி காலை கட்சி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.

அதன்பிறகு 28-ந் தேதி சேலம் அழகாபுரத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மண்டபத்தில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும், மறுநாள் 29-ந் தேதி சேலம் அண்ணாபூங்காவில் மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமிபூஜையும் நடக்கிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். மேலும், அவர் மேலும் சில நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். எனவே, சேலத்தில் 3 நாட்கள் முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் சரவணன், யாதவமூர்த்தி, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்