சிவகங்கையில் டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டம்

சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தப்பட்டது.;

Update:2018-05-03 03:45 IST
சிவகங்கை,

சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடை அமைந்துள்ள பகுதியில் கோவில், பள்ளிக்கூடம், வங்கி, தபால் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இதனால் எப்போதும் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும். எனவே இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த 28-ந்தேதி இந்த டாஸ்மாக் கடை முன்பு வாலிபர் ஒருவர் முன்விரோதத்தில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளியை சம்பவ இடத்திலேயே போலீசார் கைதுசெய்தனர். இருப்பினும் இச்சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு டாஸ்மாக் கடையே காரணம் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பினர். இந்த டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க வரும் குடிமகன்கள் குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. எனவே பெண்கள், மாணவர்கள் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி நேற்று தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. நகர செயலாளர் துரை ஆனந்த், ஒன்றிய செயலாளர் ஜெயராமன், முன்னாள் நகர்மன்ற தலைவர் நாகராஜன், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், நகர தலைவர் பிரபாகரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் பைசல், ம.தி.மு.க. நகர செயலாளர் சுந்தரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்துராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் மதி, இந்திய கம்யூனிஸ்டு கங்கைசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டு, ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட முயன்றனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், டவுன் இன்ஸ்பெக்டர் மோகன், தாசில்தார் கந்தசாமி மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒருவாரத்தில் கடையை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். 

மேலும் செய்திகள்