கயத்தாறு அருகே கார் மீது லாரி மோதல்

கயத்தாறு அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-05-02 23:00 GMT
கயத்தாறு,

மதுரையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 80). இவருடைய மனைவி கன்னியம்மாள் (65). இவர்களின் மூத்த மகன் ரமேஷ் (51), இளைய மகன் சிவா (48). இவர்கள் 4 பேரும் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து காரில் நெல்லைக்கு வந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர்கள் நேற்று நெல்லையில் இருந்து மதுரைக்கு திரும்பி செல்ல காரில் புறப்பட்டனர். காரை ரமேஷ் ஓட்டினார். நெல்லை- மதுரை பைபாஸ் ரோட்டில் கார் சென்று கொண்டு இருந்தது. கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி பகுதியில் ரமேஷ் காரை சாலையோரத்தில் நிறுத்தினார்.

அப்போது நெல்லையில் இருந்து மதுரை நோக்கி வேகமாக சென்ற லாரி ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் காரின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார், சாலையோர பள்ளத்தில் சுமார் 300 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டது.

இந்த விபத்தில் காரில் இருந்த சீனிவாசன், கன்னியம்மாள், ரமேஷ், சிவா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சீனிவாசன், கன்னியம்மாள், ரமேஷ் ஆகியோரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சீனிவாசன் பரிதாபமாக இறந்தார். சிவா கயத்தாறு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்