திருவொற்றியூரில் செல்போன் திருடர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

திருவொற்றியூரில் செல்போன் திருடர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.;

Update:2018-05-03 04:30 IST
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் கணக்கர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி காமாட்சி (வயது 32). இவர், நேற்று மதியம் அதே பகுதியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் காலடிபேட்டை மார்க்கெட் வழியாக கணவருடன் செல்போனில் பேசியபடியே தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென காமாட்சியிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காமாட்சி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள், வாலிபர்கள் வந்த மோட்டார்சைக்கிளை கீழே தள்ளி விட்டனர்.

பின்னர் 2 பேரையும் மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்து, திருவொற்றியூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன்(22), ராஜேஷ்குமார்(22) என்பதும், சென்னை துறைமுகத்தில் ஒப்பந்ததொழிலாளர்களாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள், பிரஸ் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். சமூக வலைத்தளங்களை பார்த்து செல்போன் பறிப்பது எப்படி? என கற்றுக்கொண்டதாக கைதான 2 பேரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்