ஆசிரியையிடம் கொள்ளை, திருடர்களை விரட்டி பிடித்த டிரைவருக்கு கமிஷனர் பாராட்டு

ஆட்டோவில் சென்ற ஆசிரியையிடம் பணம்-செல்போன் கொள்ளை திருடர்களை விரட்டி பிடித்த டிரைவருக்கு கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2018-05-03 22:30 GMT
சென்னை,

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் மரியமனோன்மணி (வயது 36). இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்றுமுன்தினம் இரவு அவர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஜவுளிக்கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். எழும்பூர் நாயர் மேம்பாலம் அருகே ஆட்டோ சென்றபோது, அவர் வைத்திருந்த கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பறித்து சென்றனர். அதில் மரியமனோன்மணி ரூ.18 ஆயிரம் பணம், செல்போன், ஆதார், பான், ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தார்.

இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் எழும்பூரை சேர்ந்த சுரேஷ்குமார்(37) விரட்டி சென்று திருடர்களை மடக்கினார். அப்போது 2 பேர் சிக்கினர். ஒருவன் தப்பி விட்டான். பிடிபட்ட நபர்களை பொதுமக்கள் உதவியுடன் எழும்பூர் போலீஸ்நிலையத்தில் சுரேஷ்குமார் ஒப்படைத்தார்.

பிடிபட்ட நபர்களிடம் எழும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நடத்திய விசாரணையில், அவர்கள் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார்(21), எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த விஜய்(20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடியது 16 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. அவன் நேற்று கைது செய்யப்பட்டான். குற்றவாளிகளை துணிச்சலாக பிடித்த ஆட்டோ டிரைவர் சுரேஷ்குமாரை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தனது அலுவலகத்துக்கு நேற்று வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்