ஓடும் பஸ்சில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய பெண் உள்பட 2 பேர் கைது

ஓடும் பஸ்சில் பயணிகளிடம் நகை, பணத்தை திருடியதாக ஆந்திராவை சேர்ந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-05-03 22:15 GMT
கோயம்பேடு,

சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டை அய்யா தெருவை சேர்ந்தவர் விஜயா (வயது 42), வடபழனியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பூந்தமல்லியில் இருந்து வடபழனிக்கு மாநகர பஸ்சில் விஜயா பயணம் செய்தார்.

வடபழனி பஸ் நிறுத்தத்தில் இறங்க முற்பட்டபோது, அவர் வைத்திருந்த கைப்பை திறந்து இருந்தது. அதில் இருந்த ஒரு பவுன் தங்க நகையும், 700 பணமும் திருட்டு போயிருந்தது. அப்போது அவருடன் பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவர் ஒரு வாலிபருடன் வேகமாக இறங்கி சென்றார்.

அவர் மீது சந்தேகம் அடைந்த விஜயா கூச்சலிட்டார். உடனே அங்கு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணையும், வாலிபரையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜயாவிடம் இருந்து நகை, பணத்தை திருடியதை அவர் கள் ஒப்புக்கொண்டனர்.

பிடிபட்டவர்கள் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த ரதி (32), பிரபாகர் (30) என்பது தெரியவந்தது. இரு வரும் கே.கே.நகர், விருகம்பாக்கம், வளசரவாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஓடும் பஸ்சில் பயணித்து நகை, பணம் திருடி வந்துள்ளனர்.

12 வழக்குகளில் தொடர்புடைய அவர்களிடம் இருந்து, 42 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.85 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்