ஒரகடம் அருகே ஏரியில் வாலிபர் பிணம் மிதந்தது போலீஸ் விசாரணை

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தை அடுத்த பேரிஞ்சம்பாக்கம், ஒரகடம் அருகே ஏரியில் வாலிபர் பிணம் மிதந்தது போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2018-05-04 04:00 IST
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தை அடுத்த பேரிஞ்சம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு மதன்ராஜ், லட்சுமணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். லட்சுமணன் மினி டெம்போ டிரைவராக இருந்தார். கடந்த 1-ந் தேதி வேலைக்கு சென்றவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

நீண்ட நேரமாகியும் லட்சுமணன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் மதன்ராஜ் லட்சுமணனின் செல்போனை தொடர்புகொண்டு பேசியபோது பேரிஞ்சம்பாக்கம் ஏரியில் தான் இருக்கிறேன். வீட்டிற்கு வந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். பின்னர் இவரது செல்போனை தொடர்புகொண்டபோது தொடர்புகொள்ள முடியவில்லை.

பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் பேரிஞ்சம்பாக்கம் ஏரியில் நேற்று காலை 25 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று ஏரியில் மிதந்து கொண்டிருந்தது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஒரகடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஏரியில் மிதந்த உடலை அருகில் இருந்தவர்களின் உதவியுடன் போலீசார் மீட்டனர். பின்னர் இறந்த நபர் யார்? என்று விசாரித்தபோது லட்சுமணன் என்பது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் போலீசார் லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்