கிரிவலப் பாதையில் உள்ள மரங்களை ஆசிட் ஊற்றி அழிப்பதாக மீண்டும் வதந்தி அதிகாரிகள் நேரில் ஆய்வு

கிரிவலப் பாதையில் உள்ள மரங்களை ஆசிட் ஊற்றி அழிப்பதாக மீண்டும் கிளம்பிய வதந்தியால் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.;

Update:2018-05-04 04:45 IST
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மரங்களை ஆசிட் ஊற்றி அழிப்பதாக மீண்டும் வதந்தி பரவியது. இதனையடுத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் மலை உள்ளது. இதனை அண்ணாமலையார் மலை என்று அழைக்கின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் அண்ணாமலையார் மலையை சுற்றி சுமார் 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

இந்த கிரிவலப் பாதையில் உள்ள சில மரங்கள் காய்ந்து, பட்டுபோய் உள்ளது. அந்த மரங்களை ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டதாக வதந்திகள் பரவின. அதைத் தொடர்ந்து கலெக்டர் மற்றும் அதிகாரிகள், வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது காய்ந்து, பட்டுபோன மரங்கள் ஆசிட் ஊற்றி அழிக்கப்படவில்லை. நோய் தாக்குதலினால் தான் காய்ந்தது என கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் கிரிவலப் பாதையில் சோன நதி அருகில் உள்ள புளிய மரங்களில் மீண்டும் ஆசிட் ஊற்றப்பட்டு அழிக்க முயற்சி செய்து உள்ளதாக வதந்திகள் பரவின. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அசோக் பாபு, உதவி பொறியாளர் பூபாலன், வாழவச்சனூர் வேளாண் கல்லூரியின் பேராசிரியர்கள் சிவபிரகாசம் (வனவியல்), கோவிந்தன் (பூச்சியியல்) மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், அந்த மரங்கள் நோய் தாக்குதல் மற்றும் ஆணி அடிப்பதினால் ஏற்படும் காயம் போன்றவையினால் ஏற்படும் தொற்று நோயின் அறிகுறிகள் தான் காணப்படுகின்றன. வேறு எந்த பாதிப்பு இல்லை’ என்றனர். மேலும் வேளாண் கல்லூரி பேராசிரியர்கள் அந்த மரங்களில் உள்ள பட்டைகளை ஆய்வுக்காக எடுத்து கொண்டனர். இதையடுத்து மரத்தில் பாதிப்புகள் உள்ள இடங்களில் மண்எண்ணெய் மற்றும் தாரின் கலவை பூசப்பட்டது.

மேலும் செய்திகள்