உடல் நலக்குறைவால் ஆயுள் தண்டனை கைதிகள் 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 2 பேர் உடல் நலக்குறைவால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-05-03 22:18 GMT
வேலூர்,

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள், பெண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 800-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். பேரணாம்பட்டை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 50). இவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2003-ம் ஆண்டு முதல் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நாகேந்திரனுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது.

அவருக்கு ஜெயில் வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதனால் டாக்டர்கள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். அதைத்தொடர்ந்து நாகேந்திரன் நேற்று காலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் காட்பாடி ஜாபராபேட்டையை சேர்ந்தவர் சின்னப்பையன் (50). இவரும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2010-ம் ஆண்டு முதல் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சின்னப்பையனுக்கு நேற்று முன்தினம் இரவு இருதய கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து அவருக்கு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சின்னப்பையனுக்கு மேல்சிகிச்சை அளிக்க டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதன்பேரில் அவர் நேற்று காலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அடிக்கடி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த மாதம் 30-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளனூர் கிராமத்தை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி பெருமாள் (61) உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார்.

ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை தடுக்க மருத்துவ பரிசோதனை முகாம் அடிக்கடி நடத்த வேண்டும். கைதிகளுக்கு முழு உடல் பரிசோதனை நடத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்