வேலூரில் இடி-மின்னலுடன் பலத்த மழை

வேலூரில் நேற்று இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

Update: 2018-05-03 22:40 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக கோடைவெயில் கொளுத்தி வருகிறது. அதிக பட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி 108 டிகிரியும், இந்த மாதம் (மே) 1-ந்தேதி 107 டிகிரியும் வெயில் பதிவாகி இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே 108 டிகிரி வரை வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

தொடர்ந்து 100 டிகிரிக்குமேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் சிலர் பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். நேற்று 103.3 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் அதை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், இரவில் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படி இரவு 8.40 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது.

தொடர்ந்து இரவு 10 மணிவரை இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. அதன்பிறகு லேசான தூறல் மழை பெய்தபடி இருந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் வேலூரில் வெப்பம் தணிந்தது.

இடி-மின்னல் காரணமாக வேலூரில் இரவு மின்தடை ஏற்பட்டது. இதனால் இரவில் பொதுமக்கள் வீட்டுக்குள் தூங்க முடியாமல் அவதிக்கு ஆளானார்கள்.

முன்னதாக நேற்று வேலூர் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, தோட்டப்பாளையம், சைதாப்பேட்டை, வள்ளலார், காட்பாடி உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் காலை 7 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து 4 மணி நேரம் இந்த மின்தடை நீடித்தது. 11 மணியளவில் மின்சாரம் வந்தது. அதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, திருவலத்தில் உள்ள துணை மின்நிலையத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதனால் மின்வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்றனர்.

இந்த மழையின்போது வேலூர் அண்ணாசாலையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அதேபோன்று விளம்பர பேனர்களும் விழுந்தன.

மேலும் செய்திகள்