ரெயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் ரூ.11¼ கோடி அபராதம் வசூல்

கடந்த மாதத்தில் மட்டும் ரெயிலில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.11¼ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-05-03 23:30 GMT
மும்பை,

மும்பையில் மின்சார ரெயில் சேவை மக்களின் உயிர் நாடியாக விளங்கி வருகிறது. தினமும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயில்களில் பயணம் செய்கின்றனர். பயணிகள் டிக்கெட் இன்றி பயணம் செய்வதால் ரெயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே டிக்கெட் இன்றி பயணம் செய்யும் பயணிகளை பிடிக்க ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் தீவிர பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், கடந்த மாதத்தில்(ஏப்ரல்) மட்டும் மத்திய ரெயில்வே வழித்தடத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த சுமார் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் பிடிபட்டனர். இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.11 கோடியே 24 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த நிதி ஆண்டில்(2017-18) ஒரு மாதத்தில் வசூலான அதிகபட்சமாக தொகையாகும்.

இதேபோல கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வசூலான தொகையை விட அதிகம் ஆகும். கடந்த ஏப்ரலில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பயணிகளிடம் இருந்து ரூ.8 கோடியே 60 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை மத்திய ரெயில்வே மும்பை கோட்ட மேலாளர் எஸ்.கே.ஜெயின் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்