செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதில் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-05-04 22:00 GMT
தேனி

தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில் செயல் அலுவலராக போடி அணைக்கரைப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 42) என்பவர் உள்ளார். இவர் பழனிசெட்டிபட்டியில் வசித்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முகவரி இல்லாத கடிதம் மற்றும் செல்போன் மூலம் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் மாலை 4.30 மணி வரை தீவிர சோதனை மேற்கொண்டனர். சுமார் 9½ மணி நேரம் சோதனை நடந்தது.

அதில் அவரது வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் செந்தில்குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, அவர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின், உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கோர்ட்டில் ஒப்படைப்போம். அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கோர்ட்டு தான் முடிவு செய்யவேண்டும், என்றனர்.

மேலும் செய்திகள்