தொடர்மழை காரணமாக சோத்துப்பாறை அணை நிரம்பியது

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சோத்துப்பாறை அணை நிரம்பியது. அணையில் இருந்து வினாடிக்கு 8 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

Update: 2018-05-04 23:00 GMT
பெரியகுளம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126 அடியாகும். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தாலும், கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீருமே நீர்வரத்தாக உள்ளது. இந்த அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் தாமரைக்குளம் மற்றும் பாப்பையன்பட்டி, பெரியகுளம் கண்மாய்களுக்கு செல்கிறது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வினாடிக்கு 69 கன அடி நீர் வரத்து உள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக அணை நிரம்பியது. இதனால் உபரிநீர் வினாடிக்கு 8 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. மேலும் பெரியகுளம் குடிநீருக்காக வினாடிக்கு 3 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணை முழுகொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டால் வராகநதி ஆற்றின் கரையோர கிராமங்கள் பாதிக்கப்படும். இதையடுத்து கரையோர கிராமங்களான பெரியகுளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் பகுதிகளில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்