பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு முறையை ரத்து செய்ய வேண்டும்

பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று டாக்டர் மதாஸ் கூறியுள்ளார்.

Update: 2018-05-04 22:15 GMT
சென்னை,

பா.ம.க. நிறுவனத்தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பெறும் பணி தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதும், கலந்தாய்வும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது களநிலவரம் தெரியாமல் எடுக்கப்பட்ட மிகவும் அபத்தமான முடிவாகும்.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக அதை மாணவர்களால் எதிர்கொள்ள முடியுமா? என்பதை அரசு ஆராய்ந்திருக்க வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் சேருபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் முதல் தலைமுறை மாணவர்கள் ஆவர். இவர்களுக்கு வழிகாட்ட அவர்களின் குடும்பத்தில் எவரும் இருக்க மாட்டார்கள் என்பதால், அவர்களால் விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வை ஆன்லைன் மூலம் செய்ய முடியாது. அதுமட்டுமின்றி நடப்பாண்டில் பொறியியல் படிக்க தகுதியுடைய 12-ம் வகுப்பு பாடப்பிரிவுகளில் தேர்வு எழுதிய 4,27,009 மாணவர்களில் மூன்றில் இரு பங்கினர் ஊரக மாணவர்கள் என்பதால் அவர்களால் திடீரென திணிக்கப்பட்ட ஆன்லைன் முறையை எதிர்கொள்ள முடியாது.

நடப்பாண்டில் கலந்தாய்வும் ஆன்லைனில் நடப்பதால் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை இன்னும் குறையும். இதற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை என்பதால், குறைந்தபட்சம் ஆன்லைன் கலந்தாய்வு முறையையாவது ரத்து செய்து, கடந்த காலங்களைப் போலவே அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நேரில் பங்கு பெறும் வகையிலான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்