குட்கா தொழிற்சாலையில் போலீசார் சோதனை: சி.பி.ஐ. விசாரணையை திசை திருப்ப நடத்தப்படும் நாடகம், மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

‘கோவை அருகே குட்கா தொழிற்சாலையில் போலீசார் சோதனை நடத்தியது சி.பி.ஐ. விசாரணையை திசை திருப்ப நடத்தப்படும் நாடகம்’ என்று கோவை ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2018-05-04 23:30 GMT
கோவை,

கோவையை அடுத்த கண்ணம்பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குட்கா தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற தி.மு.க. நிர்வாகிகள் 7 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ., நா.கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்த கொண்டு பேசியதாவது:-

குட்கா பிரச்சினை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஒரு தெளிவான உத்தரவை வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் அதை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக கோவையில் திடீரென்று ஒரு குடோனில் 18 மணி நேரம் சோதனை நடத்தி முடித்து அதன் மூலமாக தி.மு.க. மீது பழி சுமத்தி இருக்கிறார்கள். நியாயமாக, வெளிப்படையான சோதனை நடத்திட வேண்டும். உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக தான் தி.மு.க.வினர் அங்கு சென்று தட்டி கேட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டிருக்கிறது. இதை கண்டு என்றைக்குமே நாங்கள் அஞ்சி நடுங்கி பின்வாங்கி விட மாட்டோம்.

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி அரசின் ஆணைக்கு அல்லது இங்கு இருக்க கூடிய மாவட்ட அமைச்சரின் ஆணைக்கு கட்டுப்பட்டு சில சதி வலைகளை பிண்ணி அபாண்டத்தை சுமத்திட வேண்டும் என்பதற்காக வழக்கு போட்டு இருக்கிறார். இன்றைக்கு ஆளும் கட்சிக்கு பயந்து வழக்குகளை போட்டிருக்கலாம். ஆனால் நாளைக்கு வரப்போகிற தி.மு.க. ஆட்சிக்கு நீங்கள் நிச்சயமாக பதில் சொல்லியே தீர வேண்டும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

சென்னை மாதவரம் பகுதியில் கடந்த 8.7.2016 அன்று குட்கா குடோனில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரி ராஜேந்திரன், அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்பட பலருக்கு ஏறக்குறைய ரூ.40 கோடிக்கு மேல் மாமுல் கொடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அப்போது டி.ஜி.பி.யாக இருந்த அசோக்குமாரிடம் வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும் என்று ஒரு கடிதம் அனுப்பியது. அவர் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் முறையாக விசாரித்தால் பலர் சிறைக்கு செல்ல நேரிடும் என்பதற்காக அவரின் பணி நீட்டிப்பை இரவோடு இரவாக ரத்து செய்து வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

தலைமை செயலாளர் பதவியில் இருந்த ராம்மோகன்ராவிடம் ஒப்படைக்கப்பட்ட டைரி மாயமாக மறைந்து விட்டது. அப்போது தமிழகத்தின் முதல்- அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் வருமான வரித்துறையிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று சொல்லி உள்ளார். ஆனால் அதை சென்னை ஐகோர்ட்டு ஏற்றுக்கொள்ளவில்லை.

குட்கா எங்கே விற்கப்படுகிறது என்று பல்வேறு ஆதாரங் களுடன் நான் சட்டசபையில் காண்பித்தேன். தடை செய்யப்பட்ட குட்காவை சட்டசபையில் கொண்டு வந்தது தவறு என்று உத்தரவிட்டு என்னை வெளியே தூக்கி போட்டனர். ஆனால் தடை செய்யப்பட்ட பொருளை விற்பதற்கு அமைச்சரும், போலீஸ் அதிகாரியும் துணை நிற்கிறார்களே? இது என்ன நியாயம் என்று நான் கேட்டேன். அதற்கு எந்த பதிலும் வரவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த புதுக்கோட்டை மாவட்டத்திலே பல ஆண்டுகளாக சூப்பிரண்டாக இருந்தவர் தான் தற்போதைய கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி. அப்போதே அவர்களுக்குள் என்னென்ன தொடர்புகள் இருந்தது என்பதற்கெல்லாம் எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டுமல்ல. விஜயபாஸ்கருக்கு துணை நிற்கிற எந்த அதிகாரியாக இருந்தாலும் நாங்கள் விட்டு வைக்க மாட்டோம் என்பது உறுதி.

கோவை அருகே போராட்டம் நடத்தியபோது உள்ளாட்சி அமைப்பின் தலைவர் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் வேலை என்னவென்றால் எங்கே கட்டிடம் கட்டினாலும் அதை பரிசீலித்து அனுமதி தர வேண்டும். அது தான் உள்ளாட்சி அமைப்பின் வேலை. குட்கா விற்க உள்ளாட்சி அமைப்பின் அனுமதி தேவையில்லை. அது அவசியமும் கிடையாது. ஆனால் குட்கா விற்க அனுமதி கொடுத்தார் என்ற அபாண்டமான குற்றச்சாட்டை அவர் மீது சுமத்தியுள்ளனர். அதை ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா?.

குட்கா விவகாரத்தில் தொடர்புடையவர்கள் சிறைச்சாலைக்கு செல்ல வேண்டிய நேரத்தில் அதை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக ஒரு நாடகத்தை கோவையில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த நாடகத்துக்கு துணை போகிற அதிகாரி இந்த மாவட்டத்தில் இருக்கிறார் என்று சொன்னால் அது தான் வெட்க கேடு. வேடிக்கையாக இருக்கிறது.

நிச்சயமாக சொல்கிறேன், குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நேர்மையாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி தான் மலர போகிறது. அப்படி ஆட்சி உருவாகும் நேரத்தில் குட்கா வழக்கில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல. சிக்கியவர்களை காப்பாற்ற துடித்துக் கொண்டிருக்கிறவர்களும் சேர்த்து கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

எனது பக்கத்தில் நின்றிருக்கும் ஆ.ராசா மீது மிகப்பெரிய பழி சுமத்தப்பட்டது. உடனே நீதிமன்றத்திற்கு சென்று குற்றமற்றவற்றவன் என்று நிரூபித்து விட்டு வா என்று கருணாநிதி உத்தரவிட்டார். அவரது உத்தரவை ஏற்று அடுத்த நிமிடமே மத்திய மந்திரி பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்தார். அவரை போல தயாநிதிமாறன் மீதும் குற்றம் சுமத்தப்பட்ட போது அவரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இவ்வாறு அவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக தமிழக அரசுக்கு எதிராக தி.மு.க.வினர் பல்வேறு முழக்கங்கள் எழுப்பினார்கள். அவர்களோடு சேர்ந்து மு.க.ஸ்டாலினும் முழக்கங்கள் எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, சொத்து பாதுகாப்பு குழு துணை தலைவர் பொங்கலூர் பழனிசாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது தி.மு.க.வினர் சிலர் கழுத்தில் குட்கா பாக்கெட்டுகளை சுற்றியும் கைகளில் ஏந்தியும் வந்து இருந்தனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க.வினர் 7 பேரை பார்க்க மு.க.ஸ்டாலின் சென்றார். அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு திரும்பிய அவர் சிறை வாசலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நியாயமாக மாவட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு போடவேண்டும். அவர் தான் இந்த மாவட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அடுத்து இத்தனை நாள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி மீது வழக்கு போட்டிருக்க வேண்டும். குட்கா குடோன் பிரச்சினையில் உண்மையை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும், நியாயத்துக்காகவும் போராடிய தி.மு.க.வினரை கைது செய்து வழக்கு போட்டிருப்பது சர்வாதிகாரமான போக்கு.

ஏற்கனவே குட்கா வழக்கில் மாட்டிக்கொண்டிருக்கிற அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், போலீஸ் அதிகாரி ஜார்ஜ் ஆகியோர் விரைவில் சிறைக்கு செல்ல உள்ளனர். அதை மூடி மறைக்க வேண்டுமென்பதற்காக இந்த நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. இது எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்