நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் சிக்கல்

கரூர் உழவர் சந்தை அருகே நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் குளறுபடி ஏற்பட்டது. இதையறிந்த நகராட்சி ஆணையர் அசோக்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Update: 2018-05-04 22:30 GMT
கரூர்

கரூர் உழவர் சந்தை அருகே திரு.வி.க. ரோடு பகுதியிலுள்ள கடைகளின் ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறப்பட்டது. இதையடுத்து நேற்று நகராட்சி அதிகாரிகள் அங்கு ஆக்கிரமிப்பினை அகற்றுவதற்காக வந்தனர். இதையறிந்ததும் சிலர் தங்களது கடையின் முன்புறத்தில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்கள், விளம்பர பலகைகள் ஆகியவற்றை உள்ளே எடுத்து வைத்துக்கொண்டனர். அப்போது உழவர் சந்தையின் முன்புறத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக தரைக்கடை வைத்திருந்தவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையோரமாக கடையை வைக்கக்கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் தரைக்கடை, தள்ளுவண்டி மூலம் வியாபாரம் செய்தவர்கள் தங்களது பொருட்களை எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினர். உழவர் சந்தையின் எதிர்புறம் உள்ள திடலில் இறைச்சி கடைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு பொக்லைன் மூலம் அங்கு மண்சாலை தோண்டி போட்டனர். மேலும் அங்கு சாலையோரமாகவும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் உழவர் சந்தையை ஒட்டியுள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தின் முன்புறத்தில் மேற்கூரை அமைத்து விரிவாக்கம் செய்யப்பட்டிருந்ததை அதிகாரிகள் அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். அந்த கட்டிடத்தில் கடை வைத்திருந்தவர்கள், நாங்கள் நீண்ட நாளாக இங்கு கடை வைத்திருக்கிறோம். எவ்வித முன் அறிவிப்பு இன்றி எப்படி கடையை அப்புறப்படுத்தலாம் என கேள்வி எழுப்பினர். மேலும் அந்த வணிக வளாக கட்டிடம் குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையும், கோர்ட்டு பிறப்பித்த உத்தரவையும் அதிகாரிகளிடம் காண்பித்து அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக அங்கு பாதுகாப்பிற்காக, கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கிடையே வணிக வளாக கட்டிட ஆக்கிரமிப்பு அகற்றுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து நகராட்சி ஆணையர் அசோக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையறிந்ததும் உடனே சம்பவ இடத்திற்கு வந்த அவர் அந்த வணிக வளாக கட்டிட கடைகளுக்குள் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு கண்டனம் தெரிவித்து அங்கு கடைக்காரர்கள் கூடி விட்டனர். பின்னர் நகராட்சி வணிக வளாகம் கட்டிடம் மீதான கோர்ட்டு உத்தரவினை உரிய முறையில் பின்பற்றி, இந்த பிரச்சினை தொடர்பாக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களிடம் கூறிவிட்டு ஆணையர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்