இளம் வயதில் பணக்காரர் ஆவது எப்படி?

ஒருவர் திட்டமிட்டுச் சில நிதி ஏற்பாடுகளைச் செய்துகொண்டே வந்தால், அவரால் விரைவிலேயே பணக்காரராகிவிட முடியும் என்கிறார்கள் நிதி ஆலோசனை நிபுணர்கள்.

Update: 2018-05-05 08:51 GMT
காலம்போன காலத்தில், ‘நான் அப்படிச் செய்திருந்தால் இப்போது இருக்கும் நிலைமையே வேறு... அன்றைக்குத் தவற விட்டுவிட்டேன், அதனால் இன்று வருத்தப்படுகிறேன்’ என்று புலம்பிப் பயனில்லை.

அனுபவிப்பதற்கு வயதும் உடம்பில் வலுவும் இருக்கும்போதுதான் பர்ஸ் கனமாக இருக்க வேண்டும். அது ஒன்றும் அசாத்தியமான விஷயமில்லை.

ஒருவர் திட்டமிட்டுச் சில நிதி ஏற்பாடுகளைச் செய்துகொண்டே வந்தால், அவரால் விரைவிலேயே பணக்காரராகிவிட முடியும் என்கிறார்கள் நிதி ஆலோசனை நிபுணர்கள்.

அந்த ஏற்பாடுகள் என்ன? அவை பற்றிப் பார்ப்போம்...

நாம் எவ்வளவு தூரம் சீக்கிரமாக சேமிக்கத் தொடங்குகிறோமோ, அவ்வளவு நல்லது.

ஒருவர் படிப்பையெல்லாம் முடித்து, சராசரியாக 25 வயதில் சம்பாதிக்கத் தொடங்குகிறார். சொந்தமாக வருவாய் ஈட்டத் தொடங்கியதுமே, தனது நீண்டகால ஆசைகள், விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள எண்ணுவதும், கொஞ்சம் தாராளமாகச் செலவழிக்கத் தொடங்குவதும் இயல்பு.

அது முழுக்கத் தவறில்லை என்றாலும், நாம் கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் எதிர்காலம் வளமையாகும். நாம் நம் 30 வயதுக்குள்ளாகவே எதிர்கால நிதி நிலையை நோக்கில் கொண்டு சில செயல்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கிவிட வேண்டும்.

* ஆரம்பகட்டமாக, எஸ்.ஐ.பி. எனப்படும் சிஸ்டமேட்டிக் இஸ்வெஸ்ட்மென்ட் பிளானில் முதலீடு செய்வது நல்லது. இதற்கு பெரிய நிதி அறிவு அவசியமில்லை. சிறுதுளி பெருவெள்ளம் போல எஸ்.ஐ.பி. வளர்ந்து பின்னாளில் நமக்குக் கைகொடுக்கும். நமது வங்கிக் கணக்கில் இருந்து மாதந்தோறும் இத் திட்டத்துக்கு தானாக பணம் எடுக்கும்படி வைத்துக்கொண்டால், ஒரு நிதி ஒழுங்குக்கு நாம் பழகிவிடுவோம்.

* அவசரத் தேவை, எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு என்று வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் சேமித்து வருவது பலரின் பழக்கம். இந்த வழமையான வழக்கத்துக்குப் பதிலாக, தேவைப்படும்போது உடனடியாக கையில் பணமாக அளிக்கக்கூடிய குறுகிய கால முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

* காப்பீடு செய்வது, அதிலும் டெர்ம் இன்சூரன்ஸ் பெறுவது முக்கியமானது. இதில் முதிர்வுத் தொகை கிட்டாது என்பதால் பலரும் இந்தக் காப்பீட்டில் நாட்டம் கொள்வது இல்லை. ஆனால், வருவாய் ஈட்டும் தமக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் குடும்பம் தடுமாறாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவோர், டெர்ம் இன்சூரன்ஸ் பெற வேண்டும். இளவயதிலேயே இந்த இன்சூரன்ஸ் பெறும்போது, பிரீமியம் குறைவாக இருக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.

* இளவயதில் நம் ஆரோக்கியம் குறித்து நமக்கு திடமான நம்பிக்கை இருக்கும். அதனால் மருத்துவக் காப்பீடு குறித்து எல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டோம். ஆனால் இன்றைய சூழலில் மருத்துவக் காப்பீடு அவசியமானது. இளவயதில் இதற்கும் பிரீமியம் குறைவாக இருக்கும். மருத்துவக் காப்பீட்டின் முழுப் பலனைப் பெறுவதற்கான 3- 4 ஆண்டு காத்திருப்பு காலத்தையும் இளவயதில் எளிதாகக் கடந்துவிடலாம்.

* ஓய்வு காலம் நிம்மதியாக அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள், பணம் சம்பாதிக்கத் தொடங்கும்போதே அதற்கும் திட்டமிட வேண்டும். ஓய்வு காலத்துக்குச் சேமிப்பதற்கு பி.பி.எப். எனப்படும் பப்ளிக் பிராவிடன்ட் பண்ட் சிறந்த வழி. இதில் குறைந்த அளவாக ரூ. 500 கூட சேமிக்க முடியும். இதில் 15 ஆண்டுகளுக்கு பணத்தை எடுக்க முடியாது என்பதால் அது பாதுகாப்பாக இருக்கும். இதில் வரிச்சலுகையும் கிடைக்கும். பி.பி.எப்.பில் இருந்து எடுக்கும் தொகைகளுக்கும், வட்டி களுக்கும் வரிவிலக்கு உண்டு.

இதுபோன்ற நிதி நடவடிக்கைகளை தொடர்ந்து வந்தால், குறைந்த வயதில் பணக்காரர் ஆவது கனவாக இருக்காது. 

மேலும் செய்திகள்