விசைத்தறி உரிமையாளர்களுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட கூலியை இன்று முதல் வழங்க வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு உயர்த்தி அறிவிக்கப்பட்ட கூலியை இன்று முதல் வழங்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தர விட்டார்.;

Update:2018-05-06 04:30 IST
கோவை,

கோவை- திருப்பூர் மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இதை நம்பி 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்த விசைத்தறி களின் உரிமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் துணி ரகங்களுக்கான கூலியை உயர்த்தி வழங்க கேட்டனர்.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் கடந்த 2014-ம் ஆண்டில் சோமனூர் ரகத்துக்கு 30 சதவீதமும், பல்லடம் ரகத்துக்கு 27 சதவீதமும் கூலி உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கூலியை ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கவில்லை.

இதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால் அதில் எவ்வித முடிவும் ஏற்பட வில்லை. எனவே கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

அத்துடன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். இதை தொடர்ந்து தொழிலாளர் துறை அதிகாரிகள் தலைமையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப் பட்டன.

இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கலெக்டர்கள் ஹரிகரன் (கோவை), பழனிசாமி (திருப்பூர்) ஆகியோர் தலைமை தாங்கினார்கள். தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

தொழிலாளர் துறை கூடுதல் ஆணையாளர் செந்தில்குமாரி வரவேற்றார். தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட கூலியை வழங்கவில்லை என்று கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இங்கு பேசினார்கள். அதுபோன்று சிலர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கூலியைவிட குறைந்த கூலியை பெற்றுக்கொண்டனர். அதை அவர்கள் வாங்க மறுத்து இருந்தால், இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்காது என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

நீங்கள் இருவரும் மிகவும் முக்கியமானவர்கள். ஜவுளித்தொழில் வளர்ச்சி பெற முக்கிய காரணம் வகிப்பவர்கள். எனவே ஏற்கனவே கடந்த 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கூலியான சோமனூர் ரகத்துக்கு 30 சதவீதமும், பல்லடம் ரகத்துக்கு 27 சதவீதத்தையும் ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை (இன்று) முதல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் திருப்பூர் ஈஸ்வரன், செட்டிகாளியப்பன், நடராஜ், பல்லடம் சிவா மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்கள் பழனிசாமி (சோமனூர்), வேலுசாமி (பல்லடம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உற்பத்தியாளர் சங்க தலைவர் பழனிசாமி (சோமனூர்) நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏற்கனவே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அறிவிக்கப்பட்ட கூலியை வழங்குவோம் என்று ஏற்றுக்கொண்டு, 3 மாதம் வரை மட்டுமே வழங்குவார்கள். அதன் பின்னர் பழைய கூலியே வழங்கப்படும்.

எனவே இன்று (நேற்று) நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி உயர்த்தப்பட்ட கூலியை தொடர்ந்து வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு வழங்கவில்லை என்றால், உயர்த்தி அறிவிக்கப்பட்ட கூலியை பெறும் வரை தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்