புவியியல், சுரங்கத்துறை சார்பில் கனிம அறக்கட்டளை நிதி பயன்படுத்துதல் கலந்துரையாடல் கூட்டம்

புவியியல், சுரங்கத்துறை சார்பில் கனிம அறக்கட்டளை நிதி பயன்படுத்துதல் கலந்துரையாடல் கூட்டம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடந்தது.

Update: 2018-05-05 22:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் சார்பில் கலெக்டர் நடராஜன் தலைமையில் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி பயன்படுத்துதல் குறித்த மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

மத்திய அரசு பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் கனிமம் எடுப்பதனால் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலைகளை கண்டறிந்து அவற்றை சீர்செய்திடும் விதமாக அந்தந்த பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கனிம அறக்கட்டளை செயல்படுத்த அறிவுறுத்தி உள்ளது. மாவட்ட கனிம அறக்கட்டளையானது கலெக்டரை தலைவராகவும், கனிமம் சார்ந்த பிற அரசுத்துறை தலைமை அலுவலர்களை உறுப்பினர்களாகவும் பங்கேற்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளபடி 12.1.2015-க்கு முன்பு வழங்கப்பட்ட கனிம குத்தகைகளுக்கு சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்கள் செலுத்தும் கனிம உரிமக்கட்டணத்தில் 30 சதவீதமும், 12.1.2015-க்கு பின்பு வழங்கப்பட்ட கனிம குத்தகைகளுக்கு சம்பந்தப்பட்ட குத்தகைதாரர்கள் செலுத்தும் கனிம உரிமக்கட்டணத்தில் 10 சதவீதம் வசூக்கவும், இந்த நிதியின் மூலம் குவாரி உரிமம் வழங்கப்பட்ட பகுதிகளில் குவாரி பணியினால் பாதிப்படைந்த மக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர், சுகாதாரம், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் திறன் வளர்ச்சி திட்டங்களுக்கும், நீர்ப்பாசன அபிவிருத்தி, எரிசக்தி அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாடு ஆகிய திட்டங்களுக்கு பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுஎள்ளது.

மேலும் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் விதமாக முதற்கட்டமாக கடலாடி யூனியன் ஏர்வாடி கிராமத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், ஆழ்துளை கிணறு மற்றும் பயணிகள் நிழலகம் அமைக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்ட கனிம கட்டமைப்பு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் அனந்தகோபாலன், மத்திய அரசு சிறப்பு திட்ட ஆலோசகர் பியூலா, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்