நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி சேவூரை சேர்ந்த தந்தை-மகன் உள்பட 3 பேர் சாவு

நம்பியூர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றபோது சேவூரை சேர்ந்த தந்தை, மகன் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்கள்.

Update: 2018-05-05 22:30 GMT
நம்பியூர்,

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வந்தார்.

அவருடைய மனைவி மேனகா (33). இவர்களுடைய மகன் அருண்குமார் (16). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பு செல்ல இருந்தான்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் அதிக அளவு செல்கிறது.

கோடை விடுமுறை என்பதால் செந்தில்குமார் தனது மனைவி, மகன், மனைவியின் தங்கை மகேஸ்வரி (21) மற்றும் உறவினர்கள் பவித்ரா (14), சவுமியா (15), திவ்யதர்ஷினி (19) ஆகியோரை அழைத்துக்கொண்டு குளிப்பதற்காக ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி கீழ்பவானி வாய்க்காலுக்கு நேற்று பகல் 11 மணி அளவில் வந்தார்.

அங்கு வாய்க்கால் கரை அருகே 7 பேரும் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தார்கள். அப்போது உள்ளே இருந்த கல் வழுக்கியதில் சிறுவன் அருண்குமார் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு தத்தளித்தான். உடனே அருகில் நின்ற மகேஸ்வரி அவனை காப்பாற்ற முயன்றார்.

அவரும் தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்டார். இவர்கள் 2 பேரையும் காப்பாற்ற செந்தில்குமார் தண்ணீரில் குதித்தார். அவரும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதைப்பார்த்ததும் கரையோரம் நின்று குளித்து கொண்டிருந்தவர்கள் 3 பேரையும் காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இதில் செந்தில்குமார், அருண்குமார், மகேஸ்வரி ஆகிய 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

உடனே இதுபற்றி கோபி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து நிலைய அதிகாரி ஜெகதீசுவரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வாய்க்காலில் இறங்கி 3 பேரின் உடல்களையும் தேடும் பணியில் ஈடுபட்டார்கள்.

தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட இடத்திற்கு சற்று தொலைவில் ஆழமான பகுதியில் 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.

இதற்கிடையே இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் உடல்களையும் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இறந்த மகேஸ்வரி அவினாசியை சேர்ந்தவர். கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

வாய்க்காலில் மூழ்கி 3 பேர் இறந்த சம்பவம் அவர்களது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்